அடையாறு ஆற்றை நெருங்குகிறது 'காவேரி'; சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் சிறுவாணி பொருத்தும் பணி தீவிரம்

சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் 'சிறுவாணி' சுரங்கம் தோண்டும் எந்திரம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், அடையாறு ஆற்றை நெருங்குகிறது 'காவேரி' சுரங்கம் தோண்டும் எந்திரம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.;

Update:2023-06-18 15:22 IST

மெட்ரோ ரெயில் பாதை

சென்னையில் 2-ம் கட்டமாக 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 119 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் வேகம் எடுத்து உள்ளது. மாதவரம் மற்றும் கிரீன்வேஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகின்றன. இந்த சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு எந்திரத்துக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்கள் சராசரியாக 700 மெட்ரிக் டன் எடை கொண்டவையாகும்.

பணியை நிறைவு செய்த 'ஆனைமலை'

மாதவரம் பால்பண்ணை அருகில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி தொடங்கியது. தற்போது, இப்பணி விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் வரையிலான 3-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் `ஆனைமலை' 410 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதைப்பணியை கடந்த மாதம் நிறைவு செய்தது. தொடர்ந்து மாதவரம் பால் பண்ணையில் இருந்து வேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான மற்றொரு சுரங்கப்பாதையை தோண்டி வரும் 4-வது சுரங்கம் தோண்டும் எந்திரம் `சேர்வராயன்' வருகிற செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்கிறது.

மாதவரம் பால் பண்ணை- மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான முதலாவது சுரங்கம் தோண்டும் எந்திரம் 'நீலகிரி', மொத்த நீளமான 1,380 மீட்டரில் சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வரையிலான 2-வது சுரங்கம் தோண்டும் மற்றொரு எந்திரம் 'பொதிகை' மொத்த நீளமான 1,380 மீட்டரில் சுமார் 851 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது.

அடையாறு ஆற்றை நெருங்கும் 'காவேரி'

அதேபோல், கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூங்காவில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு சந்திப்பு வரை உள்ள 1.226 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தொடங்கியது. `காவேரி' என்று பெயரிப்பட்டுள்ள இந்த எந்திரம் சுமார் 200 மீட்டர் தூரத்தை கடந்து அடையாறு ஆற்றை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் பணியை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு நோக்கி தோண்டப்படும் மற்றொரு சுரங்கத்தை `அடையாறு' என பெயரிடப்பட்டுள்ள சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியில் ஈடுபட உள்ளது. கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்கம் தோண்டும் பணிக்கு 8 சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

சேத்துப்பட்டு ஏரியில் 'சிறுவாணி'

இதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலை மாத இறுதியில் பணி தொடங்குகிறது. இதற்காக சேத்துப்பட்டு ஏரியின் அருகில் உள்ள சுரங்க ரெயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் பொறுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த எந்திரத்துக்கு 'சிறுவாணி' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

பனகல் பார்க் நிலையத்திலிருந்து நந்தனம் வழியாக 29 மீட்டர் ஆழத்தில் வருகிற அக்டோபர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் பணியை தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட் கிளப்பை சென்றடையும். அதேபோல், கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்