சிவகிரி அருகே இருமாவட்டங்களை இணைக்கும் நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும்- பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா?
சிவகிரி அருகே இருமாவட்டங்களை இணைக்கும் நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.;
சிவகிரி
சிவகிரி அருகே இருமாவட்டங்களை இணைக்கும் நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மூழ்கிய தரைப்பாலம்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொரசப்பாளையத்தில் நொய்யல் ஆறு செல்கிறது. இங்கு ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் செல்ல பழைய தரைப்பாலம் உள்ளது,
இந்த தரைப்பாலம் கரூர் மாவட்டம் ரங்கசாமி கோவில் பகுதி மற்றும் ஈரோடு மாவட்டம் பொரசப்பாளையத்தை இணைக்கிறது, இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இந்தநிலையில் கடந்த 6 மாதமாக நொய்யல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலம் மூழ்கிவிட்டது.
பொதுமக்கள் வேதனை
தண்ணீர் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் போதெல்லாம் பொரசப்பாளையத்தில் உள்ள தொடக்க பள்ளிக்கு வரமுடியாமல் ரங்கசாமி கோவில் பகுதி மாணவ, மாணவிகள் சிரமப்படுகிறார்கள். இதேபோல் அப்பகுதியில் இருந்து கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகளும் நொய்யல் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதை மீறி செல்லவேண்டும் என்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டும். ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை இணைக்கும் இந்த தரைப்பாலம் உள்ள இடத்தில் மேம்பாலம் கட்டவேண்டும் என்று பல ஆண்டுகளாக இருமாவட்ட பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எப்போது நடவடிக்கை எடுப்பார்களோ? தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.