கரூர் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கரூர் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் விளையாட்டு
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை சிவசக்தி நகரை சேர்ந்தவர் சத்யபாமா (வயது 42), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய கணவர் ராஜலிங்கம். இவர்களுடைய மகன் சஞ்சய் (23). இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சத்யபாமா தனது கணவரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார்.
சமையல் கலை படிப்பை படித்து வந்த சஞ்சய் அதனை பாதியில் நிறுத்திவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. மேலும் ஓய்வு நேரங்களில் செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட அவர் அதற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதில் அதிகளவில் பணத்தை இழந்ததாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் மர்ம ஆசாமிகள் அவரது ஐ.டி.யை ஹேக்கிங் செய்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சஞ்சய் ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தடை செய்ய வேண்டும்
இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட சஞ்சய் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் இருந்து சில தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஆன்லைனில் விளையாட்டிற்கு அடிமையானதால் அதிகளவில் பணத்தை இழந்தேன். எனவே யாரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.
கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்ன பண்ணுவது... யாரும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகாதீர்கள். என்னை மாதிரி யாரும் ஏமாறாதீர்கள். ஆன்லைன் விளையாட்டை தடை செய்தால் தான் என்னை மாதிரி ஆட்கள் திருந்துவார்கள் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கரூர் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.