கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-03 18:49 GMT

எறிபத்த நாயனார் விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமி நாளான நேற்று எறிபத்த நாயானர் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதையடுத்து கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பு விழாவுக்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

யானை வாகனம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னர் கரூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே நந்தவனத்தில் பூ பறித்து கொண்டு சிவகாமி ஆண்டார் நடந்து வருவது போலவும், அப்போது மதம் பிடித்து ஓடிய யானை பூக்குடலையை தட்டி விட்டவுடன் வேல்கம்பு உள்ளிட்டவற்றுடன் அந்த யானையை சிவபக்தர்கள் துரத்தி வருவது போலவும், பின்னர் விழாமேடையில் வைத்து மழு எனும் ஆயுதத்தால் எறிபத்த நாயனார் யானையின் தும்பிக்கை வெட்டியவுடன் அது கீழே சாய்வதையும் போல் நிகழ்ச்சி நடந்தது.

சிவகோஷம்

பின்னர் புகழ்சோழ மன்னர் வேடமணிந்த ஒருவர் தான் வைத்திருந்த வாளால் தன்னை வெட்டும்படி கேட்டு கொண்டார். அப்போது பசு வாகனத்தில் அலங்கார வள்ளியுடன் காட்சிதந்த பசுபதீஸ்வரர் இறந்த யானையை உயிர்த்தெழச்செய்து பூ மழை பொழிந்து ஆசீர்வாதம் செய்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த பூக்களை தூவி வழிபட்டனர். மேலும் சிவ கோ‌ஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து பூக்குடலைகள் புடைசூழ சிவகாமி ஆண்டார் முன்னே செல்ல, அதற்கு பின்னால் பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, புகழ் சோழ மன்னருடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் பூக்குடலையை கையில் குச்சியால் சுமந்தப்படி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக கோவில் சார்பில் பூக்குடலைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன. பக்தர்கள் பூக்களை வாங்கி வந்து அதில் வைத்து கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் மேள, தாளம் முழங்க சென்றது. சிவபக்தர்கள் பலர் நடனமாடிய படியும், சிவபக்தி பாடல்களை பாடிய படியும் சென்றனர்.

சாமி தாிசனம்

ஊர்வலம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி ஜவகர் பஜார், மனோகரா கார்னர், காமாட்சியம்மன் கோவில், திண்ணப்பா கார்னர், பழைய அரசு மருத்துவமனை சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த பூக்குடலையில் பக்தர்கள் தங்களது இடர்கள் நீங்க வேண்டி கொண்டு வந்த பூக்களை சாற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். எங்கு திரும்பினாலும் பக்தர்கள் தலையாக தென்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்