மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதிசபாநாயகர் அப்பாவு பேச்சு

மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி என்று சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2023-07-30 18:45 GMT

நாகர்கோவில்,

மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி என்று சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நூற்றாண்டு விழா

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா வாழ்த்தரங்கம் நாகர்கோவில் புன்னை நகரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் டேவிட்சன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்று பேசினார். முன்னாள் வட்டச் செயலாளர் ஜெரின் சிங், கவுன்சிலர் சோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சாதி, சமூகம், இனத்திற்கு அப்பாற்பட்டு உழைத்தவர் கருணாநிதி. எல்லாரையும் மதிக்கிற பண்பு அவருக்கு உண்டு. பெருந்தலைவர் காமராஜருக்கும், கருணாநிதிக்கும் அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மரியாதையுடன் அவர்கள் நடந்து கொள்வார்கள். கல்விக்கண் திறந்தவர் காமராஜர். காமராஜருக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து சட்டமாக்கினார். இதனால் காமராஜர் பிறந்த நாள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்தால் கூட அன்று பள்ளிகள் திறந்து இருக்கும்.

யாத்திரை எடுபடாது

காமராஜரை பெருமைப்படுத்திய கருணாநிதி வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருகிறார். மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி. இந்திய அளவில் பெண்கள் உயர் கல்வியில் 26 சதவீதம் படிக்கின்றனர். அதில் தமிழகத்தில் 72 சதவீதம் பெண்கள் உயர் கல்வி படிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், 'நாட்டில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் நிலைக்குமா? என்பது பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது. பா.ஜனதா அரசு ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் இதற்கு பெண்கள் ஆணையம் வாய் திறக்கவில்லை. இதெல்லாம் தேசத்துக்கு அச்சுறுத்தல் ஆகும்.

பெரும்பான்மை மக்களுக்கு ஆதாரவாக பேசி அவர்களை கவர நினைக்கிறார்கள். மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் நரேந்திரமோடி வாய் திறக்கவே இல்லை. அமித்ஷாவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இங்கு அண்ணாமலை பாத யாத்திரை செல்கிறார். இந்த மண் பெரியார் மண். எனவே அண்ணாமலை யாத்திரை இங்கு எடுபடாது' என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், முன்னாள் எம்.பி. எம்.சி.பாலன், பாலபிரஜாபதி அடிகளார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன், லீமாரோஸ், நூர் முகமது, புஷ்பலீலா ஆல்பன், ரெஜினால்டு, குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசை தம்பி, வர்த்தக அணி மாநில துணை அமைப்பாளர் தாமரை பாரதி, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் பசலியான், அரசு வக்கீல் லீனஸ் ராஜ், கலை இலக்கிய பேரவை மாநில செயலாளர் தில்லை செல்வம், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்