நெல்லை கலெக்டராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு
பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற கார்த்திகேயன் தெரிவித்தார்.;
பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற கார்த்திகேயன் தெரிவித்தார்.
புதிய கலெக்டர் பொறுப்பு ஏற்பு
நெல்லை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய விஷ்ணு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு துறை நிர்வாக இயக்குனராக பணிமாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக இருந்த கார்த்திகேயன் நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக நேற்று காலையில் பொறுப்பு ஏற்றார்.
டாக்டரான இவர் கடந்த 2014-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானார். 2 ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னர் நெல்லையில் பயிற்சி சப்-கலெக்டராகவும், திருப்பத்தூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சப்-கலெக்டராகவும் பணியாற்றினார். அதன்பின்னர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவர் கடந்த ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நெல்லை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று உள்ளார்.
புதிய கலெக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னோடி மாவட்டமாக உயர்த்த...
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு முன்னோடி திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை மேலும் சிறப்பாக செயல்படுத்தி நெல்லை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக உயர்த்த பணிகள் மேற்கொள்ளப்படும். அடிப்படை கல்வி, பொது சுகாதாரம், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் போன்றவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும் முதல்-அமைச்சர் அறிவுரையின்பேரில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளும் நல்ல முறையில் நடத்தப்படும். அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும். அரசின் முன்னோடி திட்டங்களான சுகாதாரம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், உதவி கலெக்டர் சந்திரசேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.