திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள உலகபிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு முன்பிருந்ததைபோல் விழா நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பரணி தீபம்
பின்னர் கோவில் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும், வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 3.35 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பரணி தீபம் கோவில் பிரகாரத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.
அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணி தீபம் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பின்னர் காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.
தீர்த்தவாரி
இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.
அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியை நெருங்கும்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் 2,668 அடி உயர மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அதனை கண்டு தரிசிப்பதற்காக நகர் முழுவதும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று கொண்டிருந்த பக்தர்களும், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்களும் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்திகோஷம் எழுப்பினர். இந்த மகாதீபம் 11 நாட்கள் காட்சி தரும்.
20 ஆயிரம் போலீசார்
விழாவையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டன. திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். 11 டிரோன்கள் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.