கார்த்திகை தீப அகல்விளக்குகள்

கார்த்திகை தீப அகல்விளக்குகள் விற்பனையாகி வருகிறது.

Update: 2022-12-04 18:45 GMT

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல் விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல, மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

சலுகை வழங்க வேண்டும்

விருத்தாசலத்தை சேர்ந்த அகல் விளக்கு மொத்த விற்பனையாளர் செல்வம்:- கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே மழை தொடங்கி விட்டது. இதனால் குறைவாக உற்பத்தி செய்தோம். அகல் விளக்கு வேண்டும் என கேட்டு வந்தவர்களுக்கு கூட கொடுக்க முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு மழை விட்டு, விட்டு பெய்து வந்ததால், வெயில் அடிக்கும் நேரத்தில் தேவையான அளவுக்கு அகல் விளக்கு தயாரித்து விட்டோம்.

அகல் விளக்குகள் விற்பனையும் நன்றாக இருக்கிறது. என்னை போல் அனைத்து கம்பெனிகளுமே அகல் விளக்குகளை அதிகளவு உற்பத்தி செய்து விட்டதால் சிறு, குறு உற்பத்தியாளர்கள் அகல் விளக்குகளை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அகல் விளக்குகளை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்கள் தான் கிடைக்கவில்லை. அரசு நடவடிக்கை எடுத்து தேவையான அளவிற்கு மூலப்பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். மூலப் பொருட்கள் பற்றாக்குறையால் இந்த தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. இதை ஊக்குவிக்க அரசு தேவையான சலுகைகளை வழங்க வேண்டும்.

வருமானம் இல்லை

சிதம்பரத்தில் அகல்விளக்கு விற்பனை செய்யும் சித்ரா:- நான் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்குகள் வாங்கி விற்பனை செய்து வருகிறேன். குறிப்பாக விருத்தாசலத்தில் இருந்து தான் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கிறேன். முன்பு அகல் விளக்குகளுக்கு மவுசு அதிகம். ஆனால் இப்போது அப்படி இல்லை. மெழுகு விளக்குகள், செராமிக் விளக்குகளில் தீபம் ஏற்றி விடுகிறார்கள். அதிலும் சிலர் ஆன்லைனில் வாங்கி செல்லும் நிலையும் உள்ளது. இதனால் முன்பு போல் வருமானம் இல்லை. தற்போது மழை பெய்து வருவதால் வியாபாரம் படுமோசமாக உள்ளது. மழை நின்றால் தான் வியாபாரம் ஓரளவு இருக்கும்.

களிமண் கிடைக்கவில்லை

காட்டுமன்னார்கோவிலில் அகல் விளக்கு மற்றும் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் செல்வராணி:- எங்கள் பகுதியில் பல குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து, பிழைப்பு நடத்தி வருகிறோம். சீஷனுக்கு தகுந்தாற்போல் விளக்குகள், மண்பானை, பொம்மைகள் செய்து விற்பனை செய்வோம். தற்போது பலர் இந்த தொழிலை விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள். தற்போது குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களே இந்த தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கு அரசு நல வாரியம் மூலம் ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கிடைக்கிறது. களி மண் தேவையான அளவுக்கு கிடைப்பதில்லை. இதனால் அதிக விலை கொடுத்து களி மண் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்த்து உள்ளூரிலேயே களி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் எங்கள் வாழ்க்கையிலும் ஒளி வீசும்.

ஒளி இழப்பு

அகல் விளக்கு தயாரித்து வரும் குமரேசன்:- நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். தற்போது காட்டுமன்னார்கோவிலில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடப்பதால் தரமான களி மண் கிடைக்கவில்லை. அரசு தரமான மண் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அகல்விளக்குகள் விற்பனை மழையின் காரணமாக மந்தமாக உள்ளது. இன்று (திங்கட்கிழமை) விற்பனை செய்தால் தான் உண்டு. மழை பெய்தால் வியாபாரம் படுமோசமாக மாறி விடும். முன்பு தெருவோர கடைகளில் மட்டும் கிடைத்து வந்த அகல்விளக்குகள் தற்போது பெரிய கடைகளிலும் எளிதில் கிடைக்கிறது. இதனால் எங்களை போல் மண்பாண்ட தொழிலாளர்கள், விற்பனையாளர்களின் வாழ்க்கை ஒளி இழந்தே காணப்படுகிறது.

ரூ.2 முதல் ரூ.280 வரை விற்பனை

கடலூரை சேர்ந்த லட்சுமி:- நான் விருத்தாசலத்தில் இருந்து மொத்தமாக அகல் விளக்கு வாங்கி விற்பனை செய்கிறேன். 5 அகல்விளக்குகள் ரூ.10-க்கும், 3 விளக்குகள் ரூ.10-க்கும் விற்பனை செய்கிறேன். காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, 5 முக விளக்கு, பாவிளக்கு என பல்வேறு வகையான அகல்விளக்குகளை விற்பனை செய்கிறேன். ஒரு விளக்கு ரூ.2 முதல் ரூ.280 வரை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒரு டிராக்டர் களிமண் ரூ.6500

தெருவோரத்தில் அகல்விளக்கு விற்பனை செய்யும் விஸ்வநாதன்:- முன்பு எங்களை போல தெருவோர கடைகளில் தான் அகல்விளக்குகளை பொதுமக்கள் வாங்குவார்கள். தற்போது காலம் மாறி விட்டது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வாங்கி விடுகிறார்கள். மேலும் பெரிய கடைகளிலும் அகல்விளக்குகளை விற்பனை செய்வதால் எங்களுக்கு வியாபாரம் பாதிப்பாக தான் இருக்கிறது.

குமாரமங்கலத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி அம்சவல்லி:- கடந்த 30 ஆண்டுகளாக மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கார்த்திகை தீப திருநாளில் அகல்விளக்குகளும், பொங்கல் பண்டிகையில் மண்பானையும் தயாரித்து விற்பனை செய்கிறோம். ஆனால் எங்கள் பகுதியில் களிமண் எடுக்கக்கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நாங்கள் பண்ருட்டி, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒரு டிராக்டர் களிமண் விலை ரூ.6500- க்கு வாங்கி வந்து, அகல் விளக்குகள், பானை செய்து வருகிறோம். ஆனால் ரெடிமேட் விளக்குகள் வருகையால் எங்கள் விளக்குகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்.

அர்ச்சகரின் அறிவுரை

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் அர்ச்சகர் சேஷாத்திரி - கார்த்திகை தீபத்தில் விளக்கேற்றுவது விஷேசமாகும். அதிலும் இயற்கையாக நாம் மண் விளக்கில் ஏற்றுவது மிகவும் உத்தமம். ஏனென்றால் பஞ்சபூதங்களும் உறையும் இடம் மண் விளக்கு. சேற்றில் (மண்) நீரை ஊற்றி நன்றாக பிசைந்து விளக்கு செய்து, அதை நெருப்பில் சுட்டு அதில் கிடைக்கும் விளக்கில் தீபம் ஏற்றினால், அதில் காற்றிலும் பிரகாசமாக எரிகிறது. களி மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளில் மட்டும் தான் பஞ்சபூதங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

எந்த கோவில்களிலும் தீபம் ஏற்றும் போது பெரிய அகலில் வைத்து எண்ணெய் அல்லது நெய்யில் தீபம் ஏற்றுவார்கள். மண் விளக்கு இயற்கையோடு சேர்ந்தது. நமது முன்னோர்கள் கடைபிடிப்பதை நாமும் கடைபிடிப்போம்.

இருள் நீங்கி ஒளி மலரும்

கடலூரை சேர்ந்த இல்லத்தரசி வசந்தி:- வீட்டில் தீபம் ஏற்றினால் இருள் நீங்கி வாழ்க்கையில் ஒளி மலரும் என்பது ஐதீகம். அதுவும் கார்த்திகை மாதம் தீப திருவிழாவில் களி மண்ணால் ஆன அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் மிகவும் சிறப்பாக இருக்கும். மனதுக்கும் நிம்மதி கிடைக்கும். ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாளின்போது புதிதாக அகல்விளக்குகள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். கடைகளில் தற்போது களி மண் விளக்குகளை தவிர ரெடிமேட் விளக்குகளும் அதிகம் விற்பனைக்கு வந்து விட்டது. இருப்பினும் நான் களி மண் அகல்விளக்கு தான் வாங்குவேன். அது தான் நல்லது. மற்ற விளக்குகளை வாங்க மாட்டேன்.

வாடிக்கையாளர் மனநிலை

இதேபோல் அகல்விளக்கு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் சிலர் கூறுகையில், இன்றைய அவசர வாழ்க்கையில் துணிமணிகள், உணவு வகைகள் என எல்லாத்துறைகளிலும் ரெடிமெட் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது. ரெடிமெட் பரோட்டா, நூடுல்ஸ், தோசை மாவு, புட்டு மாவு வந்துவிட்டன. வேலை சட்டென்று முடிய வேண்டும் என்று நினைக்கும் மக்கள் இவற்றை வாங்குகிறார்கள்.

அதேபோன்று கார்த்திகை தீபத்திருநாளில் அகல்விளக்கை ஏற்றுவதற்கு எண்ணெய், திரி வாங்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் ரெடிமெட் மெழுகு விளக்குகள் மீது கவனம் செலுத்துகிறார்கள். நாகரிக மாற்றம், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப வியாபாரத்திலும் புதுமையை புகுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்