'கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது' - கே.பாலகிருஷ்ணன்

கர்நாடக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2023-05-13 17:40 GMT

விழுப்புரம்,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் அமித்ஷா, மோடி கூட்டணிகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.

கர்நாடகாவில் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டும் கூட பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. இது கர்நாடகாவில் பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல, அகில இந்திய பா.ஜ.க.விற்கும், மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய அடி என்பது தான் உண்மை.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைவதற்கு இந்த தேர்தல் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. கர்நாடக மக்களுக்கு எங்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்