சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் சாவு-உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை
சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் இறந்தார். எனவே அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சடையன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் புஷ்பராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற புஷ்பராஜ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது குடும்பத்தினரிடம் செல்போனில் பேசியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை புஷ்பராஜ் அவரது அறையில் இறந்து கிடப்பதாக அவரது நண்பர்கள் புஷ்பராஜின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்ற வாலிபர் அங்கு இறந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிக ஏழ்மையான சூழலில் உள்ள புஷ்பராஜின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் புஷ்பராஜின் உடலை சொந்த ஊர் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.