திருப்பூர் ஆதிபராசக்தி கோவில் வீதியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 36-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தின் திருப்பூர் மாவட்ட தலைவி சக்தி சரஸ்வதி சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மூத்த நிர்வாகி ராயபுரம் என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து கஞ்சிக்கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பெண்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உள்ள ஆதிபராசக்தி அன்னைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பக்தர்களுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலஉதவிகளை வழங்கினார். விழாவில் சக்தி பீட தலைவர்கள் நிரஞ்சனா தேவி, காண்டீபன், சாந்தி உள்பட பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.