லாபம் தரும் மூலிகை பயிர் கண்வலி கிழங்கு
லாபம் தரும் மூலிகை பயிர் கண்வலி கிழங்கு
மூலனூர்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி நமது முன்னோர்கள் அனைத்து வகை நோய்களையும் குணமாக்கினர். மூலிகைகளில் செடி வகைகள், கொடி வகைகள், மரவகை மூலிகைகள் மற்றும் கிழங்கு வகை மூலிகைகள் என பல உள்ளன.
வணிக ரீதியாக சாகுபடி செய்தால் மற்ற பயிர்களை காட்டிலும் நல்ல லாபம் பெறலாம் என நிரூபித்த மூலிகை பயிர்களில் கண்வலி கிழங்கு முதன்மையானது. 1980-ம் ஆண்டு கண்வலி கிழங்கு சாகுபடி திருப்பூர் மாவட்டம் மூலனூரில் ஆரம்பித்தது.ஆரம்பத்தில் அதன் கிழங்குகள் மருந்து பொருள்கள் தயாரிக்க பயன்படுகின்றது.அதன் விதைகளில் அதிக அளவு மருந்து மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்து விதைகளுக்காக கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டது. கண்வலி கிழங்கு செங்காந்தள், கார்த்திகை கிழங்கு, நாபிக் கொடி என பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. இப்பயிரின் விதைகள் மற்றும் கிழங்குகளில் உள்ள கோல்ச்சிசின், கோல்ச்சிகோசைடு, சூப்பர் பைன் போன்ற மருத்துவ மூலப் பொருள்கள் மூட்டு வலி, பக்கவாத நோய்கள், சுவாசக் கோளாறுகள் மற்றும் வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகின்றன. பயிர் மேம்பாட்டு ஆய்வு பணிகளில் சடுதி மாற்ற காரணியாகவும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கண்வலி கிழங்கு விதைகள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.திருப்பூர் மாவட்டம் சார்ந்த மூலனூர் வட்டாரத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கண்வலி கிழங்கு விதைகளையும், அதன் மருந்து பொருட்களையும் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கணிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது.
கண்வலி கிழங்கு சாகுபடிக்கு வடிகால் வசதி உடைய மணற் பாங்கான சரளை செம்மண் ஏற்றவை வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை உள்ள பகுதிகளில் இப்பயிர் நன்கு வளரும். ஜூன்-ஜூலை மாதங்கள் கண்வலி கிழங்கு பயிருக்கு நடவுபருவம் ஆகும். நிலத்தினை நன்கு உழுது அடியுரமாக ஹெக்டேர்க்கு 25 மெட்ரிக் டன் தொழு உரம் இடவேண்டும்.கடைசி உழவில் 5 கிலோ அசோசியஸ் பைரில்லம், 5 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியன இட வேண்டும்.60 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய ரசாயன உரங்களை கிழங்குகளை நடவு செய்த பின் அதன் அருகே இட்டு நீர்பாய்ச்ச வேண்டும்.1மீட்டர் இடைவெளியில் 20 சென்டிமீட்டர் ஆழம், அகலம் உடைய நடவு வாய்க்கால்கள் அமைத்து அதில் 60 சென்டிமீட்டர் இடைவெளியில் 5 சென்டிமீட்டர் ஆழத்தில் கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.ஒவ்வொரு கிழங்கும் 80 கிராம் எடை உடையதாக தேர்வு செய்திட வேண்டும்.ஒரு ஹெக்டேரில் நடவு செய்திட 1250 கிலோ கிழங்குகள் தேவைப்படும்.
இப்பயிர் கொடி வகை பயிராக உள்ளதால் சுமார் 3 அடி உயரத்தில் கம்பி வரிசைகள் அமைத்தல் அல்லது கிளுவை முள் அல்லது விளாரிமார் போன்றவற்றை செடியின் இருபுறமும் நட்டுவிட வேண்டும். கிழங்குகளை நடவு செய்த பின் 5 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.பூக்கும் நிலையில் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுவது அவசியம். வறட்சி பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் அமைத்து நீர் பாய்ச்சிடலாம். முளைத்து வரும் கொடிகளின் நுனிப்பகுதி சேதம் அடையாதவாறு சாகுபடி முறைகளை மேற்கொள்ள வேண்டும். கிழங்குகளை விதைத்து 30 நாட்கள் கழித்து மேலுரமாக 1ஹேக்டேர்க்கு 30 கிலோ தழைச் சத்தும், 60 நாட்கள் கழித்து 30 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும்.
கண்வலி கிழங்கு பயிர் மழைக்காலத்தில் துளிர்த்து படர்ந்து பூத்துக் காய்த்து விட்டு கோடைகாலத்தில் கொடிகள் காய்ந்து கிழங்குகள் உறக்க நிலைக்கு சென்று விடும் இயல்புடையது.38 டிகிரி வெப்பநிலை நிலவும் பகுதிகளில் இப்பயிர் அதிக பூக்கள் பூக்கும்.ஒவ்வொரு கொடியிலும் 70-80 பூக்கள் பூக்கும். இந்த பயிரின் கிழங்குகளை நடவு செய்த 180 நாட்கள் கழித்து 250 கிலோ விதைகளும், 300 கிலோ கிழங்குகளும் முதலாம் ஆண்டு மகசூல் பெறலாம் ஒரு முறை கிழங்குகளை நட்டு கண்வலிக்கிழங்கு பயிர் செய்தால் 5 ஆண்டு வரை இப்பயிரினை வைத்து நல்ல மகசூல் பெறலாம்.முதலாம் ஆண்டு சாகுபடி செலவு அதிகமாக இருப்பினும் விளையும் நான்கு ஆண்டுகளில் விதை மற்றும் கிழங்கு மகசூல் அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேர்க்கு சுமார் 2.50 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.