திருப்பூர்
திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்புசாமி, ஏட்டுகள் பர்கத் அலிகான், ராஜதுரை ஆகியோர் நேற்று முன் தினம் திருப்பூர் ரெயில் நிலையத்தில் 1-வது நடைமேடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தன்பாத் ரெயில் வந்ததும் அந்த ரெயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது 7-வது பெட்டியில் கழிவறை அருகில் சந்தேகத்துக்கு இடமாக பையுடன் நின்றவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. உடனே அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம் நாளந்தா இப்ராகிம்பூர் பகுதியை சேர்ந்த மனோஜ் பஸ்வான் (வயது 49) என்பதும், 8 கிலோ கஞ்சாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ் பஸ்வானை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.