பெண் டிரைவர் ஓட்டிய பஸ்சில் கனிமொழி எம்.பி. பயணம்
கோவையில் பெண் டிரைவர் ஓட்டிய பஸ்சில் கனிமொழி எம்.பி. பயணம் செய்தார். அந்த பஸ் டிரைவர் சிறிது நேரத்தில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு நிலவியது.
கோவையில் பெண் டிரைவர் ஓட்டிய பஸ்சில் கனிமொழி எம்.பி. பயணம் செய்தார். அந்த பஸ் டிரைவர் சிறிது நேரத்தில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு நிலவியது.
சாதனைப் பெண்
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 24). கோவையில் தனியார் பஸ்சை இயக்கும் முதல் பெண் டிரைவராக உள்ளார்.
இவர் காந்திபுரம்-சோமனூர் வழித்தடத்தில் பஸ்சை இயக்கி வந்தார். பெண் ஒருவர் கனரக வாகனமான பஸ்சை ஓட்டுவதால் அந்த சாதனைப் பெண்மணியை அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.
ஷர்மிளா பஸ் இயக்குவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின.
கடந்த 12-ந் தேதி அன்று அந்த பஸ்சில் கோவை தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கனிமொழி எம்.பி. பயணம்
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும். அவருக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்ததுடன், கோவை வரும்போது உங்கள் பஸ்சில் பயணிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று காலை கனிமொழி எம்.பி. கோவை காந்திபுரம் வந்தார். அவர், தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர், டிரைவர் ஷர்மிளாவுக்கு வாட்ச் பரிசளித்து ஊக்குவித்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட ஷர்மிளா நன்றி தெரிவித்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி. அதே பஸ்சில் பயணிகளுடன் அமர்ந்து காந்திபுரத்தில் இருந்து பீளமேடு பஸ் நிறுத்தம் வரை பயணம் செய்தார்.
அப்போது அவரிடம், அந்த பஸ்சில் கண்டக்டராக இருந்த அன்னத்தாய் என்பவர் டிக்கெட் எடுக்குமாறு கூறினார்.
கனிமொழி எம்.பி.யின் உதவியாளர் ரூ.120 கொடுத்து 6 பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து அவர், சக பயணிகளுடன் கலந்துரையாடினார். பீளமேடு பஸ் நிறுத்தத்தில் கனிமொழி எம்.பி.யும், அவருடன் வந்தவர்களும் கீழே இறங்கிக் கொண்டனர்.
வாக்குவாதம்
அதன்பிறகு டிரைவர் ஷர்மிளா கண்டக்டர் அன்னத்தாயிடம், "கனிமொழி எம்.பி.யிடம் ஏன் டிக்கெட் எடுக்க சொன்னீர்கள்?" என்று கேட்டு இருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அவர்களை பஸ்சில் இருந்த பயணிகள் சமாதானம் செய்தனர். ஆனால் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் ஷர்மிளா, பஸ் நிர்வாகத்தினரிடம் புகார் அளிக்க சென்றார்.
அவர்கள், உனக்கு விருப்பம் இல்லை என்றால் பணியில் இருந்து நின்று கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.
உடனே ஷர்மிளாவும், பணியில் இருந்து நின்று கொள்வதாக கூறி இருக்கிறார்.
இது குறித்து டிரைவர் ஷர்மிளா கூறியதாவது:-
ராஜினாமா
கனிமொழி எம்.பி.யிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள் என்று கண்டக்டர் அன்னத்தாயிடம் நான் கேட்டவுடன் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி பஸ் உரிமையாளரை சந்தித்து புகார் தெரிவித்தேன்.
அவர், உனது விளம்பரத்திற்காக ஆட்களை அழைத்து வருவதாக கூறி கண்டித்தார்.
கனிமொழி எம்.பி. வருவது குறித்து நான் ஏற்கனவே பஸ் மேலாளரிடம் கூறியதாக சொன்னேன்.
ஆனால் அந்த மேலாளர், நான் அவ்வாறு கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
உடனே பஸ் உரிமையாளர், எனது தந்தையிடம் உனது மகளை அழைத்து செல் என்றார்.
மனஉளைச்சல் ஏற்படும் வகையில் அவர் பேசியதால் நானும் பஸ்சில் இருந்து இறங்கி கொள்வதாக கூறி வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்து விட்டேன்.
இவ்வாறு டிரைவர் ஷர்மிளா கூறினார்.
இது குறித்து பஸ் உரிமையாளர் துரைகண்ணு கூறுகையில், கனிமொழி எம்.பி. வருவது குறித்து ஷர்மிளா என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. பீளமேடு பஸ் நிறுத்தம் வந்ததும் ஷர்மிளா திடீரென்று பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டார்.
மாற்று டிரைவர் மூலம் பஸ் இயக்கப்பட்டது. ஷர்மிளாவை நாங்கள் பணி நீக்கம் செய்யவில்லை. அவராகவே பணியில் இருந்து நின்று கொண்டார் என்றார்.
செல்போனில் பேசிய கனிமொழி
டிரைவர் ஷர்மிளா பணியில் இருந்து நின்றதை அறிந்த கனிமொழி எம்.பி., அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், பஸ் உரிமையாளரிடம் பேசி மீண்டும் வேலை வாங்கி தருவதாக சொன்னார்.
ஆனால் டிரைவர் ஷர்மிளா, மீண்டும் பணியில் சேர மறுத்து, தான் ஆட்டோ ஓட்ட செல்வதாக கூறினார்.
உடனே அவர் பண உதவி, மாற்று வேலை அல்லது வங்கி கடன் உள்பட தேவையான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்தார்.
அவருக்கு, டிரைவர் ஷர்மிளா நன்றி கூறினார்.
கோவையில் தனியார் பஸ்சில் கனிமொழி எம்.பி. பயணம் செய்த சிறிது நேரத்தில் பெண் டிரைவர் ஷர்மிளா திடீரென பணியை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.