முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடந்தது. போளூரில் பெண்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-10-30 12:55 GMT

ஆரணி

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நடந்தது. போளூரில் பெண்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழா

ஆரணி கொசபாளையம் பகுதியில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது ஆண்டு கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி கடந்த 24-ந் தேதி முதல் தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளையும் லட்சார்ச்சனை நடைபெற்றது.

கந்த சஷ்டி விழா நிறைவு நாளான இன்று லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கோவில் வெளிவளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை 108 முறை வலம் வந்தனர்.

இதேபோல சின்ன கடை தெருவில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி கோவில், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், சேவூர் சுபான்ராவ் பேட்டை புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பால்குட ஊர்வலம்

போளூர் நற்குன்று பாலமுருகன் மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது.

விழாயொட்டி இன்று டாக்டர் சிவநேசன் தலைமையில் 200 பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நற்குன்று பாலமுருகன் கோவிலை அடைந்தனர்.

அங்கு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்