காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 30 பெண்களுக்கு வாந்தி-மயக்கம்...!
வாலாஜாபாத் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 30 பெண்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.;
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. பைக் மற்றும் கார்களுக்கு கேபிள்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. இந்த தொழிற் சாலையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று இரவு பணிக்கு வந்தவர்கள் தொழிற் சாலையில் உள்ள கேண்டினில் உணவு சாப்பிட்டனர். அப்போது உணவில் பல்லி ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது. பல்லி இருந்த உணவை உண்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 36 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலை பஸ் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் வாந்தி -மயக்கமடைந்தவர்களையும் உடல் நலக் குறைவு ஏற்பட்டவர்களையும் உடனடியாக மீட்டு, 55 பேர் வாலாஜாபாத் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கும், 11 பேர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொழிற்சாலையில் பணி புரிந்தவர்களிடையே கடும் பீதியையும், அச்சத்தையும் உண்டாக்கியது. மேலும் தொழிற்சாலையில் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக காஞ்சிபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.