காமாட்சியம்மன் கோவில் கோபுர கலசம் திருட்டு
பட்டிவீரன்பட்டியில் காமாட்சியம்மன் கோவில் கோபுர கலசம் திருடு போனது.
பட்டிவீரன்பட்டி காந்திபுரம் மருதாநதி ஆற்றங்கரையோரத்தில், காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்பகுதியை சேர்ந்த மக்கள் இங்கு சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் வழக்கம் போல கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர்கள், கோபுரத்தை தரிசனம் செய்வதற்காக பார்த்தபோது, அங்கு கலசங்கள் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதேபோல் காமாட்சியம்மன் கோவில் உள்ள விநாயகர் கோவிலில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு கோபுர கலசம் திருடு போனது. அடுத்தடுத்து கோவில்களில் கோபுர கலசங்கள் திருட்டு போன சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.