காமராஜரின் 120-வது பிறந்தநாள்: ராமதாஸ், அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-15 06:45 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய கர்மவீரர் காமராசருக்கு இன்று 120வது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்!

கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது 120வது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம்!" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில்புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராசரின் 120வது பிறந்தநாள் இன்று. தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்துவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம்!

உலக அரங்கில் தமிழகத்தை தலைநிமிர வைத்தவர் கர்மவீரர். ஆனால், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்து நீக்கப்பட்ட அவரின் பெயர் இன்னும் மீண்டும் சூட்டப்படவில்லை. உள்நாட்டு முனையத்திற்கும், மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கும் உடனடியாக காமராசர் பெயர் சூட்டப்பட வேண்டும்!" என்று அன்புமணி கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப்புரட்சியை நிகழ்த்தி, கல்வி எனும் வெளிச்சத்தால் லட்சோப லட்சம் குடும்பங்கள் உயர்வதற்கு காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அன்னாரது பணிகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

தொழிற்துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு வித்திட்டதோடு, மக்கள் நலன் காத்த நல்லாட்சியை வழங்கிய பெருந்தலைவரின் புகழ் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்." என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்