கல்வராயன் மலை சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கா.ராமச்சந்திரன்
முதல்-அமைச்சரின் உத்தரவுப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அப்போது, கல்வராயன் மலை, கள்ளச்சாராய மலை என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிலையை மாற்ற கல்வராயன் மலையை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முன்வருமா? என்றும் சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும் எனவும், சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்துவது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப முதல்-அமைச்சரின் உத்தரவு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.