கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.;

Update: 2022-11-17 18:45 GMT

உடன்குடி:

தேரிக்குடியிருப்பு பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத கற்குவேல் அய்யனார் கோவிலில் வியாழக்கிழமை கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது.

கற்குவேல் அய்யனார் கோவில்

தேரிக்குடியிருப்பு அருகே குதிரைமொழி தேரியில் உள்ள பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத  கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா நேற்று பகல் 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூர்ணாதேவி, புஷ்கலா தேவி அம்பாள்களுக்கும், கற்குவேல் அய்யனார் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும், இரவு வில்லிசையும் நடைபெறும். அடுத்தமாதம்(டிசம்பர்) 14-ந்தேதி மாலை 6 மணிக்கு ஐவர் ராஜா பூஜையும், டிச. 15-ந் தேதி காலை முதல் இரவு வரை முழு நேர சிறப்பு பூஜையும், மாலையில் திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை நடைபெறும்.

கள்ளர்வெட்டு நிகழ்ச்சி

வருகிற டிச.16-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்று தீர்த்தம் மேளதாளத்துடன் எடுத்த வருதல், பகல் 11 மணியளவில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர்வெட்டு நிகழ்ச்சிக்கு புறப்படுதல், மாலை 4.30 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள செம்மண் ேதரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

புனித மணல்

இதற்காக தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து கோவில் வளாகத்தில் 3 நாட்கள் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து, கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடந்த இடத்தில் மணலை வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த புனித மணலை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வார்கள். விவசாயம், வியாபாரம், புதிய கட்டிடங்கள் கட்டும்போது மற்றும் தொழில் தொடங்கும் போதும் இந்த மணலை பயன்படுத்துவது வழக்கம். உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் இந்த மணலை எடுத்து உடலில் பூசுவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் காந்திமதி, தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்,

Tags:    

மேலும் செய்திகள்