கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் திறன் பயிற்சி திட்டங்களில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெறலாம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் திறன் பயிற்சி திட்டங்களில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெறலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் சுகாதார பராமரிப்பு ஆயத்த ஆடை வடிவமைப்பு, ஆட்டோ மோடிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத் துறை, அழகுக்கலை, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்றவைகளில் வேலைவாய்ப்பு பெற இயலும். 120-க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளை சார்ந்த நிறுவனங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு நிலையான வருமானம் ஈட்டும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 130 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இதில் மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில் சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டியலினத்தினருக்கு 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம் மற்றும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது. குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்கு பின் திறன் பயிற்சி குழுமம் மூலம் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப்பின் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
1005 பேருக்கு இலக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,005 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், மகளிர் திட்டம் எனும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகம் அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் மற்றும் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 எனும் தொலைபேசி மூலமாகவும் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உதவி திட்ட அலுவலராக பணிபுரியும் ராஜா (திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு) என்பவரின் செல்போன் 94429 92115 தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். தகுதியும் விருப்பமுள்ள கிராமப்புற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களின் கல்வி தகுதிக்கேற்ப விருப்பமான தொழில் பிரிவை தேர்வு செய்து வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்
மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.