கள்ளழகர் மதுரை வருகை:புறநகர் பகுதியில் 1,200 போலீசார் பாதுகாப்பு
கள்ளழகர் மதுரை வருகை தருவதால் புறநகர் பகுதியில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் ஆகியவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா களை கட்ட தொடங்கும். அதன்படி, நேற்று அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டதை தொடர்ந்து மதுரை புறநகர் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட இருக்கின்றனர்.
குறிப்பாக, புறநகர் பகுதிகளான கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வரை உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு முழுவதும் சுவாமி புறப்பாடு நடைபெறுவதால் அழகர்கோவிலில் இருந்து மதுரை நகர் பகுதி வரை உள்ள கிராமங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.