கிராம சபை கூட்டத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. பங்கேற்பு
நிம்மியம்பட்டு ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கதிர் ஆனந்த் எம்பி கலந்து கொண்டார்.;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்கடேசன் தலைமை வகித்தார். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் திருநாவுக்கரசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சற்குண குமார் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கிராம மக்கள் குடிநீர் பிரச்சினை, மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகாரிகள் செய்து தரவில்லை எனவும், பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று எம்.பி.யிடம் பெண்கள் புகார் கூறினர்.
மேலும் இங்கு இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் குறை கூறினர்.
மேலும் 300- க்கும் மேற்பட்ட பெண்கள் படிப்பதற்கான பள்ளி கட்டிடம் இல்லாமல், ஆண்கள் படிக்ககூடிய கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவிகள் படித்து வருவதாகவும், புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த கதிர் ஆனந்த் எம்.பி. விரைவில் தனது தொகுதி நிதிலிருந்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து தமிழகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
அதே நேரத்தில் கிராமப்புற இளைஞர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதைக்கு அடிமையாக்க திட்டமும் தீட்டி இருப்பதாகவும், அவற்றை கண்காணித்து முதல்வர் தற்பொழுது அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளதாக கூறினார்.
இக்கூட்டத்தில் ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முனிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் பிரீத்தா பழனி, வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார்வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.