கடம்பன்குளம் கண்மாயில் சிவகாசி ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக சிவகாசி ஆர்.டி.ஓ. நேற்று கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.;
சிவகாசி
தினத்தந்தி செய்தி எதிரொலியாக சிவகாசி ஆர்.டி.ஓ. நேற்று கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.
கடம்பன்குளம் கண்மாய்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் கடம்பன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயையொட்டி நேருகாலனி, விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி ஆகியவை உள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிமான குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமான கடம்பன்குளம் கண்மாயிக்கு நீர்வரத்து அதிகரித்து அருகில் உள்ள நேரு காலனி, விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி ஆகிய பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பள்ளப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் கடம்பன்குளம் கண்மாயின் மடையை திறந்து தண்ணீரை வெளியேற்றியது.
கடம்பன்குளம் கண்மாய்-புதுக்கண்மாய் இடையே உள்ள பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தண்ணீர் வெளியேற உரிய நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று நேற்று காலை தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று கடம்பன்குளம் கண்மாய் பகுதிக்கு சென்ற சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வ நாதன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தாசில்தார்கள் லோகநாதன், சாந்தி, பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம், மாநகராட்சி கவுன்சிலர் அசோக்குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இருந்தனர்.
புதிய கால்வாய்
அப்போது கடம்பன்குளம் கண்மாய் நிரம்பினால் அதில் இருந்து தண்ணீர் வெளியேறி செல்ல புதிய திட்டம் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள், ஆர்.டி.ஓ.விடம் தெரிவித்தனர். கடம்பன்குளம் கண்மாய் தண்ணீர் பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிக்கு செல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆர்.டி.ஓ. விஸ்வ நாதன் உத்தரவிட்டார். மேலும் புதிய கால்வாய் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.