குட்டிக்கரணம் அடித்த கபடி வீரர் படுகாயம் அடைந்து சாவு
ஆரணி கோவில் திருவிழாவில் குட்டிக்கரணம் அடித்த கபடி வீரர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
ஆரணி கோவில் திருவிழாவில் குட்டிக்கரணம் அடித்த கபடி வீரர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
கபடி வீரர்
ஆரணி கொசப்பாளையம் களத்துமேட்டு தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் வினோத் (வயது 32), கட்டிட மேஸ்திரியான இவர் கபடி வீரராகவும் திகழ்ந்தார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், சந்தோஷ், கலையரசு ஆகிய 2 மகன்களும் உள்ளனர்
கடந்த 7-ந் தேதி அப்பகுதியில் உள்ள எட்டியம்மன் கோவிலில் ஆடி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அன்று இரவு கபடி போட்டி நடத்தப்பட்டது.
இந்த கபடி போட்டியில் வினோத் விளையாடி பரிசு பெற்றார். இதையடுத்து அங்கு குடியிருந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் வினோத் குட்டிக்கரணம் போட்டு வந்தார்.
தலையில் படுகாயம்
குட்டிக்கரணம் போடும்போது முதல் ஒரு தாவில் கையை கீழே ஊன்றியும், இரண்டாவது தாவில் கை ஊன்றாத நிலையில் குட்டிக்கரணம் போடும்போது கீழே விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.