வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை- ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-08-23 21:09 GMT

ஈரோடு

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

வாய்த்தகராறு

ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் செல்வன் என்கிற சித்துராஜ் (வயது 35). இவர் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வேலைகளுக்கு செல்லாமல் இருந்தார். கடந்த 7-12-2017 அன்று அங்குள்ள பொது தண்ணீர் குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு சென்ற சித்துராஜ், தண்ணீர் நிறைந்து கொண்டிருந்த குடத்தை எடுத்து தள்ளி வைத்து விட்டு, கை-கால்கள் கழுவினார்.

அப்போது அங்கு இருந்த பெண்கள், எங்கள் வீட்டு ஆண்கள் சபரிமலைக்கு மாலைபோட்டு உள்ளனர். அவர்களுக்கு எடுக்கும் தண்ணீரில் கை-கால் கழுவாதே என்று தடுத்தனர். இதனால் அவர்களுக்கும், சித்துராஜுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதைப்பார்த்த இந்திராணியும் சம்பவ இடத்துக்கு சென்று மகனுக்கு ஆதரவாக பேசினார். இதனால் மேலும் தகராறு வலுத்தது. அப்போது அங்கு வந்த ரங்கநாதன் (29) என்பவர், அவரது மாமியார் பானுமதியிடம் ஏன் தகராறு செய்கிறாய் என்று கேட்டு சித்துராஜை பிடித்து தள்ளினார்.

கொலை வழக்கு

அப்போது சித்துராஜ் அவரது கையில் வைத்திருந்த கத்தியால் ரங்கநாதனை குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் மற்றும் உடன் இருந்த பெண்கள் சித்துராஜை கடுமையாக தாக்கினார்கள். சித்துராஜிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியும், கட்டையால் அடித்தும் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் சித்துராஜ் மயங்கி விழுந்தார். அவர் அசைவின்றி கிடந்ததால் பதற்றம் அடைந்த அவர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, செல்வன் என்கிற சித்துராஜ் ஏற்கனவே இறந்து போயிருந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சித்துராஜின் தாயார் இந்திராணியின் புகாரின் பேரில் மாதேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த ரங்கநாதன், சங்கர் என்பவருடைய மனைவி பானுமதி (47), அவரது மகளும், ரங்கநாதனின் மனைவியுமான சிவரஞ்சனி (25), ராஜேந்திரன் என்பவருடைய மனைவி சித்ரா (33), லட்சுமணன் என்பவருடைய மனைவி கல்யாணி (ரங்கநாதனின் தாயார்), பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேசன் என்பவருடைய மனைவி சகுந்தலா (36) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பரபரப்பு தீர்ப்பு

மேலும் இதுதொடர்பான வழக்கு ஈரோடு 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்தநிலையில், நீதிபதி ஆர்.மாலதி (பொறுப்பு) நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட பானுமதி, சிவரஞ்சனி, ரங்கநாதன், சித்ரா, சகுந்தலா ஆகிய 5 பேரும் சித்துராஜ் செத்துவிடுவார் என்று தெரிந்தே அடித்தும், குத்தியும் தாக்கிய குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் இந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கல்யாணி என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

கொலை செய்யப்பட்ட சித்துராஜ், ஏற்கனவே ஒரு பெண்ணின் தற்கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.சதீஸ்குமார் ஆஜர் ஆனார். வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்