அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம்

தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-05 15:51 GMT

சென்னை,

அ.தி.மு.க., பொதுக்குழு கடந்த 11-ந்தேதி நடந்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை மீண்டும் ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்வதாக தலைமை நீதிபதி பதில் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரம் தொடர்பாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது. நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்று விளக்கம் அளித்த பன்னீர்செல்வம் தரப்பு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிட விரும்புவதாக விருப்பம் தெரிவித்தது.

இதையடுத்து தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை திரும்ப பெற, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வலியுறுத்தினார். இதன்படி ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும்? என்பதை முடிவு செய்து, தகுந்த நீதிபதியை நியமிப்பதற்காக இந்த மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை செய்கிறேன்" என்றார்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்