நித்தியானந்தாவை காணொலியில் ஆஜராக சொன்ன நீதிபதி: மறுத்ததால் மனு தள்ளுபடி

காணொலியில் ஆஜராக கூறியதற்கு பதிலளிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2024-09-04 10:37 GMT

சென்னை,

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இதுதொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி பெண் சீடருக்கு பொது அதிகாரம் வழங்கி நித்யானந்தா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

2017ல் தொடர்ந்த இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. வழக்கை தொடர உமாதேவி என்ற சீடருக்கு பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்துள்ளார். உண்மையிலேயே பொது அதிகார பத்திரத்தை நித்யானந்தா கொடுத்தாரா என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. ஆகவே, நித்யானந்தா நேரில் ஆஜராகி பொது அதிகார பத்திரத்தை கொடுத்தது உண்மைதான் என தெரிவிக்க வேண்டும். உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை ஆஜராக சொல்லும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நித்தியானந்தா இந்தியாவில் இல்லை, மேலும் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்றார். உடனே நீதிபதி, நித்யானந்தா எங்கு இருக்கிறார் என தெரிய வேண்டும். காணொளிக் காட்சி மூலம் அவரை ஆஜராக சொல்லலாம் என்று தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில், அவர் ஆஜராக இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதி தண்டபாணி மனுவை தள்ளுபடி செய்தார் . மேலும், நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என்றும், அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளது என்றும், காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்