சமரச மையத்தின் மூலமாக வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு பெற முடியும்

சமரச மையத்தின் மூலமாக வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு பெற முடியும் என்று திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் கூறினார்.

Update: 2023-07-01 18:18 GMT

நிரந்தர தீர்வு

திருப்பூர் மாவட்ட சமரச மைய தலைவரான திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதியின் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூர் மாவட்ட சமரச மையம் சார்பில் 'சமரசம் செய்ய விரும்பு' என்ற தலைப்பில் சமரசதாரர்கள், வக்கீல்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை வரவேற்றார்.

முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கோர்ட்டு வழக்குகளை விரைவாகவும், சமூகமாகவும் தீர்ப்பதற்கு சமரச மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இணைப்பு பாலமாக சமரசர்கள் செயல்படுகின்றனர். வழக்காடிகளுக்கு பொதுவான மற்றும் நிரந்தரமான தீர்வை சமரசத்தின் மூலமாக நாம் பெற முடியும். எனவே வக்கீல்கள் அனைவரும் தங்கள் வழக்குகளுக்கு சமரச மையத்தின் மூலம் தீர்வு காண முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து வித வழக்குகள்

சென்னை ஐகோர்ட்டு மூத்த சமரசர் மற்றும் பயிற்சியாளர் ரத்னதாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, 'சமரச மையம் என்பது நீதித்துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சமரசர்கள் அனைவரும் உங்களிடம் வரும் வழக்குகளை முடிந்தவரை மீண்டும் கோர்ட்டுக்கு திருப்பி அனுப்பாத வகையிலும், இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் தீர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். நீதிபதிகள் சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என அனைத்து விதமான வழக்குகளையும் சமரச மையத்துக்கு பரிந்துரை செய்து தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்' என்றார்.

முடிவில் காங்கயம் சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி நன்றி கூறினார். இதில் திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுகா கோர்ட்டு நீதிபதிகள், சமரசர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்