அரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை திருட்டு

திருச்செங்கோட்டில் அரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-22 18:45 GMT

திருச்செங்கோடு

அரசு ஊழியர்

திருச்செங்கோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பிரியா (வயது 52). இவரது கணவர் மதியழகன் (58). இவர் அரசு ஊழியராக உள்ளார். இவர்களுடைய மகளிர் திருமணத்திற்காக வீட்டை புதுப்பித்தனர். அதன் காரணமாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினர் வீட்டின் ஒரு அறையில் பீரோ, முக்கியமான பொருட்களை வைத்திருந்தனர். மற்றொரு அறையில் வேலை செய்ய வந்த 3 பேரை தங்க வைத்திருந்தனர்.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது அதில் வைத்திருந்த 27½ பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் வேலை செய்து வந்த ஆட்களில் ஒருவர் மட்டும் 4 நாட்களுக்கு முன்பே மாயமாகி இருப்பது தெரியவந்தது.

கைது

இதுகுறித்து பிரியா திருச்செங்கோடு நகர போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர், பிரியா வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து 27 பவுன் நகை, ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிந்து கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்