ஆசிரியை, மகளிடம் நகை பறிப்பு
தக்கலை அருகே வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை மற்றும் அவரது மகளிடம் நகை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
தக்கலை:
தக்கலை அருகே வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை மற்றும் அவரது மகளிடம் நகை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆசிரியை வீடு
தக்கலை அருகே உள்ள மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் விஜூ (வயது 45). இவர் எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி ஸ்ரீஜா (40) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மகன் பிரணவ் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியிலும், மகள் விஸ்மயா குமரியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மகன் பிரணவ் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
கொலுசு, நகை மாயம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பர்களோடு களியக்காவிளைக்கு சினிமா பார்க்க சென்ற பிரணவ் நள்ளிரவில் வீடு திரும்பினார்.
பின்னர் வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு பிரணவ் ஒரு அறையில் தூங்க சென்றார். தாயும், மகளும் மற்றொரு அறையில் தூங்கினர். காலையில் கண்விழித்த ஸ்ரீஜா அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் காலில் அணிந்திருந்த 2 பவுன் தங்க கொலுசை காணவில்லை.
உடனே தான் தூங்கிய கட்டில் மற்றும் வீடு முழுவதும் பதற்றத்துடன் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகளை பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையும் மாயமாகியிருந்தது. இதனால் திடுக்கிட்ட அவர் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு பின்பக்க கதவு திறந்து கிடந்தது.
வீடு புகுந்து கைவரிசை
இதனால் மர்மஆசாமி வீட்டின் மாடி வழியாக உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீஜா அணிந்திருந்த கொலுசு மற்றும் அவரது மகள் அணிந்திருந்த நகையை நைசாக ஆயுதம் மூலம் வெட்டி கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. அதே சமயத்தில் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை.
இதனை தொடர்ந்து இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசில் ஸ்ரீஜா புகார் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் -இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பிறகு மோப்பநாய் குக்கி கொள்ளை நடந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டது. அங்கு மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் ஓடிச்சென்று திரும்பி விட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.
மேலும் இந்த துணிகர கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து தாய், மகளிடம் கொலுசு, நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.