வீட்டின் முன் கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு
நாகர்கோவிலில் வீட்டின் முன் கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு;
நாகர்கோவில்,
நாகர்கோவில் நிலவேணி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமாரன். இவரது மனைவி லிலா (வயது 64). இவர் நேற்று காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 நபர்கள் வந்தனர். அவர்கள் லிலாவிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து, அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். உடனே லிலா, 'திருடன்... திருடன்' என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அந்த மர்மநபர்கள் நகையுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து லிலா கோட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற நபர்களை தேடி வருகிறார்கள்.