விவசாயி வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

தா.பழூர் அருகே பூட்டி இருந்த விவசாயி வீட்டின் கதவை நெம்பி வீட்டில் இருந்த நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-01-22 18:33 GMT

நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகசுந்தரவடிவேல்(வயது 62). விவசாயியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கும், அவரது மனைவி மாலாவிற்கும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியில் கனகசுந்தரவடிவேல் உள்பட 3 பேரின் வீட்டின் கதவு நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்துள்ளனர். இதை அடுத்து கனகசுந்தரவடிவேலுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக சொந்த ஊருக்கு விரைந்து வந்த கனகசுந்தரவடிவேல் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3 பவுன் தங்க நகைகளும், நாணயங்களும், 1 கிலோ வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் அச்சம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கனகசுந்தரவடிவேல் வீட்டிற்கு அருகில் உள்ள மகாலிங்கம் என்பவரது வீட்டிலும், நாராயணசாமி என்பவர் வீட்டிலும் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் அவர்கள் வீடுகளில் திருடுவதற்கு எதுவும் மதிப்பு வாய்ந்த பொருட்கள் கிடைக்காததால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு நேர் எதிரில் பொதுத்துறை வங்கி ஒன்று இயங்கி வருகிறது. மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்