சேலத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
சேலத்தில் துணிகரம் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கைவரிசை;
சூரமங்கலம்
சேலத்தில் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகையை, திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பறித்து சென்றார்.
மளிகைகடை
சேலம் மாமாங்கம் அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா (வயது 53). மளிகை கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார்.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது வாலிபர் ஒருவர் விஜயாவிடம் மளிகைபொருட்கள் கேட்டுள்ளார். அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
திருட்டு மோட்டார் சைக்கிள்
இதுகுறித்து விஜயா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிள், பள்ளப்பட்டி ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர், வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று கைவரிசை காட்டி இருப்பதும், இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.