மூதாட்டியிடம் நகை பறிப்பு
பந்தலூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.;
பந்தலூர் தாலுகா பிதிர்காடு பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவரது மனைவி யசோதா (வயது 62). இவர் கூடலூர் தாலுகா புழம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் யசோதாவை கீழே தள்ளி விட்டு அவரது கழுத்தில் இருந்த 2¼ பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பினார்.இது குறித்து கூடலூர் போலீசில் யசோதா புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், நகை பறித்தது கூடலூர் பகுதியை சேர்ந்த சனவுல்லா (40) என்பதும் தற்போது அவர் கர்நாடகாவில் வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது, வியாபாரத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் வழிப்பறியில் ஈடுபட்டதாக சனவுல்லா தெரிவித்தார்.