ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டுபோனது.

Update: 2022-08-09 23:04 GMT

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜா(வயது 62). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இதில் பெரிய மகளின் கணவருக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடந்ததால், கடந்த 6-ந் தேதி ராஜா வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை ராஜாவின் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக நவல்பட்டு போலீசருக்கும், ராஜாவிற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் ராஜா வீட்டிற்கு வந்து பார்த்தப்போது வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து பீரோவில் இருந்த 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், 8 பட்டுப்புடவைகள், 50 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நவல்பட்டு சுற்றுவட்ட பகுதியில் உள்ள விரிவாக்க பகுதிகளான அண்ணா நகர், போலீஸ் காலனி, எம்.ஜி.ஆர். நகர், சோழமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி நடப்பதாகவும், சந்தேகப்படும்படியான நபர்கள் இரவு நேரத்தில் ஆங்காங்கே உலா வருவதாகவும் கூறும் சமூக ஆர்வலர்கள், இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். எனவே நவல்பட்டு போலீசார், அப்பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு, இது போன்ற குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்