ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.;

Update:2024-05-08 12:57 IST

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார். இவர் கடந்த 2-ம் தேதி இரவு 7.45 மணியளவில் கரைசுத்துபுதூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, மாயமான ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் கடந்த 4-ந்தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. எனினும் கொலையாளிகள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் உயிரிழந்தது ஜெயக்குமார் தான் என்பதை உறுதி செய்யும் வகையில், ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை வர வாய்ப்புள்ளது என தெரிகிறது. அறிக்கை வந்தவுடன் ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்களின் டி.என்.ஏ.க்களை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்