பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம்
பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.;
பழனி முருகன் கோவில்
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
பாலாலய பூஜை
இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை தொடங்கியது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.
வர்ணம் பூசும் பணி
இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனையடுத்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. அதன்படி ராஜகோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவுற்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்ககோபுரம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம்
பெரும்பாலான பணிகள் முடிவடைந்ததையொட்டி, பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக தேதி எப்போது அறிவிக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி முருகன் கோவில் அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பக்தர்கள் எதிர்பார்த்தபடி, பழனி முருகன் கோவிலில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உத்திராட நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய நாளில் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகர லக்னத்தில் பழனி முருகன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தங்க கோபுரம்
ஜனவரி 18-ந்தேதி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26-ந்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து ஜனவரி 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவை கருத்தில் கொண்டு மண்டல பூஜை 3 நாட்கள் நடைபெறுகிறது. மூலவருக்கு மருந்து சாத்தும் தேதி துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குருக்கள்களுடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பக்தர்களுக்கு அனுமதி
கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் பணிகள் கண்காணிக்கப்படும். இதேபோல் கும்பாபிஷேகத்துக்கு முன்பு கோவில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதுநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கும்பாபிஷேகத்தன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்க முடியும் என துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையுடன் இணைந்து கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு, பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா மற்றும் இணை ஆணையர் நடராஜன் உள்பட கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.