ஜல்லிக்கட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்...!
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.;
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்தும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது எப்படி என்ற விவரங்கள் குறித்தும் தமிழக அரசிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டியின்போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும் எனவும், இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியின் பங்கேற்கும் வீரர்கள் அவரவரின் இடங்களில் தான் நிற்க வேண்டும் என்றும் காளைகள் வெளியேறும் பாதையை அடைக்க அனுமதி இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் தேவைப்பட்டால் நீதிபதிகளின் கேள்விகள் தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும், தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.