தர்மபுரி அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்-மாடுகள் முட்டி 45 பேர் காயம்

Update: 2023-03-16 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் வீரத்துடன் அடக்கினர். மாடுகள் முட்டி 45 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

தர்மபுரி மாவட்ட வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி பென்னாகரம் ரோட்டில் உள்ள டி.என்.சி. மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. போட்டி தொடக்க விழாவிற்கு உதவி கலெக்டர் கீதாராணி தலைமை தாங்கினார். நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணா கெய்க்வாட், எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 8 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் மொத்தம் 750 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளை ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக குரல் எழுப்பியபடி கண்டுகளித்தனர்.

வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் சீறி பாய்ந்தபடி வந்தன. காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பிடித்தனர். பல காளைகள் பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பிடிபடாமல் கம்பீரமாக சென்றன.

அடக்கிய வீரர்கள்

அதே நேரத்தில் வாடிவாசலில் இருந்து திமிறியபடி ஓடி வந்த பல காளைகளின் திமிலை பிடித்து தங்கள் வீரத்தையும், திறமையையும் வீரர்கள் வெளிப்படுத்தினர். போட்டியில் அடங்காமல் திமிறியபடி சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டிகளின் முடிவில் 30 காளைகளை அடக்கிய மதுரையை சேர்ந்த ஜெகதீஷ் என்ற மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோன்று திருச்சி மங்கதேவன்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மாடு சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு வாஷிங் மெசின் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்