ஜெயில் வார்டன் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் ஜெயில் வார்டன் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்யப்பட்டுள்ளது.;
ஜெயில் வார்டன்
வேலூர் தொரப்பாடி சிறை அதிகாரிகள் குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ். வேலூர் ஆண்கள் ஜெயிலில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபிகா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
இந்தநிலையில் தீபிகா வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டுள்ளார். வெகுநேரமாகியும் அறையை விட்டு தீபிகா வெளியே வராததால் குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே தீபிகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தீபிகாவின் பெற்றோர் பாகாயம் போலீசில் புகார் செய்தனர். அதில் தீபிகாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.