புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மதுரையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மதுரையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-01-05 20:15 GMT


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை, சரண்டர் தொகை, உயர் கல்விக்கான ஊக்கஊதியம் உள்ளிட்டவைகளை வழங்கிட வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று மாலை அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்