ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை

ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-28 05:03 GMT

சென்னை,

ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தை இழந்தவர்களில் ஒருசிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், இது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழுவை கடந்த 10-6-2022 அன்று அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இந்த குழு ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக தன்னுடைய அறிக்கையில் வல்லுனர் குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கியது.

இந்த அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என்றும், ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்