`நீட்' தேர்விற்கு ஒரே மாதிரி பாடத்திட்டம் இருந்தால் நல்லது

நாடு முழுவதும் நீட் தேர்விற்கு ஒரே மாதிரி பாடத்திட்டம் இருந்தால் நல்லது என திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் கூறினார்.;

Update: 2022-09-08 18:19 GMT

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை யாருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. ஒருவருக்கு பரிசோதனை நடத்தியதில் நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. மேலும் இருவரின் பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட பிரத்யேகமான டெங்கு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரி பாடத்திட்டம்

`நீட்' தேர்வு போட்டித்தேர்வு தேவை, தேவையில்லை என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருக்கிறது.தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் மாநில வாரியத்தில் (ஸ்டேட் போர்டு) படிக்கிறார்கள். ஆனால், `நீட்' தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமாக இருக்கிறது.

இதன் காரணமாக இங்குள்ள கிராமப்புற மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவது மிகவும் கடினமானது. பள்ளியில் நன்றாக படித்தாலும் இந்த முறையில் தேர்வு இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனவே ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் `நீட்' தேர்வு வைத்தால் நல்லது. அதிலும், கிராமப்புற மானவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து இந்த தேர்வை எழுத வைக்க வேண்டும்.

மருத்துவ கழிவுகள்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுவதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மருத்துவ கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு தஞ்சாவூருக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்