ஐ.டி. பெண் ஊழியர் பலாத்காரம்; கண்டக்டர் மீது வழக்கு

கோவையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஐ.டி. பெண் ஊழியரை பலாத்காரம் செய்த கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Update: 2023-05-04 19:45 GMT

கோவை

கோவையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஐ.டி. பெண் ஊழியரை பலாத்காரம் செய்த கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஈரண்ணன். இவருடைய மனைவி ரூபா. இவர்களது மகன் அருண்குமார்(வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தபோது, தன்னுடன் படித்த சக மாணவியுடன் பழகி வந்தார். பின்னர் அது காதலாக மாறியது.

அவர்கள் 2 பேரும், கடந்த 7 ஆண்டாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். கல்லூரி படிப்பு முடிந்ததும் அந்த மாணவி, கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதற்காக அவர், அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார்.

பலாத்காரம்

மேலும் அருண்குமார் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். அவர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வந்தனர். அப்போது அருண்குமார் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த இளம்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம், அந்த இளம்பெண் கூறி உள்ளார். அதற்கு திருமணம் செய்து கொள்ள மறுத்ததுடன், அவருடன் பேசுவதையும் அருண்குமார் தவிர்த்து வந்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண், அருண்குமாரின் பெற்றோரை சந்தித்து, நாங்கள் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

3 பேர் மீது வழக்கு

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், திருமணம் செய்து வைக்க மறுத்ததுடன், தகாத வார்த்தைகளால் அந்த இளம்பெண்ணை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அருண்குமார், அவருடைய பெற்றோர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்