அரசு அளிக்கும் இலவசங்களை கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

அரசு அளிக்கும் இலவசங்களை கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.;

Update: 2022-08-25 13:39 GMT

அரசு அளிக்கும் இலவசங்களை கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

சைக்கிள் வழங்கும் விழா

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 11,771 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 கோடியே 98 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

நாகரீகம் அல்ல

பஸ்கள் செல்லாத கிராமப்புறங்களில் இருந்தும் கல்வி கற்க மாணவர்கள் வரவேண்டும் என்பதற்காக தமிழக அரசு இலவசமாக சைக்கிள் வழங்குகிறது. அரசு அளிக்கும் இலவசங்களை கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல. பாடபுத்தகங்கள் கூட இலவசமாகத்தான் தருகின்றோம். பிற்படுத்தப்பட்ட நலத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இலவச சைக்கிள் தரப்படுகிறது.

இருப்பவர்களிடமிருந்து வரியைப் பெற்று இல்லதாவர்களுக்கு அளிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதன் மூலம் தான் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இலவச மின்சார உதவியே இல்லை எனில் இந்நேரத்திற்கு விவசாயத் தொழில் பாதிப்படைந்திருக்கும்.

பொதுவாக பெண்கள் அறிவுத்திறனில் ஆண்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் மதிப்பெண் பெறுவதில் மாணவிகள் முதலாவதாக இருக்கிறார்கள். பெண் பட்டதாரிகளை உருவாக்க, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் க.சங்கீதா, கூட்டுறவு சங்க தலைவர்.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயா, திருமதி, சத்யா, சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் தேவபிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்