சட்டசபையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் -எடப்பாடி பழனிசாமி பேட்டி

சட்டசபையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் எனவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உண்மையான தகவலை மறைத்து, பொய்யான தகவலை கூறுவது கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-08-14 00:13 GMT

மதுரை,

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வலையங்குளத்தில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதனை பார்வையிடுவதற்காக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை வந்தார்.

மாநாடு பணிகளை பணிகளை பார்வையிட்டு, தேவையான ஆலோசனை வழங்கினார். பின்னர் சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மீது தாக்குதல்

மணிப்பூர் சம்பவத்தையொட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு கனிமொழி எம்.பி. சில கருத்துகளை சொன்னார். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 1989-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வை குறிப்பிட்டு பேசினார். அந்த சமயத்தில் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன். அதன் அடிப்படையில் இதை நான் இங்கு தெரிவிக்கிறேன். சட்டசபையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல், பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவின் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.

அன்றைய தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினர். அப்போது திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தடுத்தனர். தடுத்துக் கொண்டு இருந்தபோது, ஜெயலலிதாவின் சேலை, முடியை பிடித்து இழுத்தனர்.

உண்மையை மறைக்கிறார்

சம்பவம் நடந்த அன்றைய தினமான 1989 மார்ச் 25-ந் தேதியை கருப்பு நாள் என்று சொல்லலாம். இன்றளவும் என் மனதில் அந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவம், சட்டசபை வரலாற்றில் நடந்தது கிடையாது. ஆனால், அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். உண்மையை மறைத்து பொய்யான தகவலை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். இது கண்டனத்திற்குரியது.

மக்களை பற்றி கவலையில்லை

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்கள். அவ்வாறு செய்தார்களா?. மக்களை ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமாக பேசி, ஏமாற்றி வாக்குகளை பெற்று விட்டனர். அவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. குடும்பம் தான் கண்ணுக்கு தெரிகிறது. குடும்பம் ஆட்சிக்கு வர வேண்டும். இதுதான் ஸ்டாலினின் நிலைப்பாடு. நான் எப்போதும் சாதாரண தொண்டன். மதத்திற்கும், சாதியத்திற்கும் அப்பாற்பட்டது அ.தி.மு.க..

இது அ.தி.மு.க. மாநாடு, கட்சி மாநாடு. கூட்டணி கட்சி மாநாடு அல்ல. அதனால் அமித்ஷா போன்றவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.

காவிரி பிரச்சினை

எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தில் கெஜ்ரிவால் கோரிக்கைகள் தொடர்பாக கண்டிஷன் போட்டு தான் அமர்ந்தார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீரை திறந்து விட்டால், இந்த கூட்டத்தில் இடம் பெறுவேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு கொடுத்திருந்தால் தண்ணீர் வந்து சேர்ந்திருக்கும். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் போல் திராணி இல்லை. விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்தான் ஸ்டாலின். தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது. சாதி சண்டை, மத சண்டை எல்லாம் தான் பார்க்க முடியும். தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்த பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்