சினிமா போல அரசியலில் ஜொலிப்பது எளிதல்ல - எடப்பாடி பழனிசாமி

‘‘சினிமா போல அரசியலில் ஜொலிப்பது எளிது அல்ல. அரசியல் முள்ளும், மேடும், பள்ளமும் நிறைந்த பாதை’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.;

Update:2022-11-06 05:18 IST

எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் தொடக்க விழா

சென்னை தியாகராயநகரில் தனியார் அறக்கட்டளையை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா

திரைப்படத்துக்கும், எனக்கும் வெகுதூரம். நான் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து 21 வருடங்கள் ஆகிறது. அரசியலும், திரைத்துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கிறது. திரைப்பட துறைக்கு அ.தி.மு.க. நிறைய உதவிகளை செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் திரைப்பட துறைக்கு ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறது. ஏனென்றால் இருபெரும் தலைவர்களும் திரை உலகில் இருந்து வந்தவர்கள்.

திரை உலகில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்பதை 2 பேரும் நன்கு உணர்ந்தவர்கள். ஆகவே திரைப்பட கலைஞர்களுக்கு, தங்களால் இயன்ற அளவுக்கு நன்மை செய்து, அவர்களின் நட்பையும் பெற்ற காரணத்தினால்தான், தலைவர்கள் எம்.ஜி.ஆரின் புகழை பேசியிருக்கிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய பாதையில் அ.தி.மு.க. தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறது.

அரசியலில் ஜொலிப்பது கடினம்

அரசியலில் ஜொலிப்பது என்பது கடினம். ஆனால் சினிமாக்களில் எளிதாக ஜொலித்து விடலாம். ஆனால் கட்சியில் அப்படி இல்லை. தெருவில் நின்று, பலரை பார்த்து, படிப்படியாக ஏறித்தான் இந்த நிலைக்கு வரமுடியும். ஆனால் திரையுலகில் மக்கள் மனதில் பதியும் வகையிலான திரைப்படங்களில் நடிப்பதின் மூலம் அந்த நிலைக்கு எளிதாக வரலாம்.

ஆனால் அரசியல் கடினமானது. எதை வேண்டுமானாலும் நினைக்கலாம், ஆனால் அதனை சட்ட விதிகளுக்குட்பட்டுதான் செயல்படுத்த முடியும். முள்ளும், மேடும், பள்ளமும் நிறைந்த பாதையே அரசியல்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்