கொரோனா தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று காரணமாக, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியமான நடவடிக்கை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-06-25 23:25 GMT

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 மணி நேரத்தில் 1 லட்சத்தையும் தாண்டிய அளவுக்கு பாதிப்பு என்பது தொடர்கிறது. தமிழகத்திலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,359 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பாதித்தவர்கள் என்ற வகையில் மொத்தம் 5,912 பேர் இருக்கிறார்கள். இதில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். மீதம் 8 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களும் கூட மிதமான பாதிப்பு என்ற வகையில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். தொண்டைவலி, காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் ஆஸ்பத்திரிகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம்

யாருக்கும் ஆக்சிஜன் தேவையோ அல்லது தீவிர சிகிச்சை தேவையோ என்ற அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாகவில்லை. என்றாலும் கூட இந்தத் தொற்றின் தன்மை என்பது ஒமைக்ரானின் ஏழு, எட்டு வகைகளில் இப்போது வந்து கொண்டிருக்கிற பி.ஏ.4, பி.ஏ.5 என்ற இந்த தொற்று வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை என்பதால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டாலும் அந்த குடும்பத்தில் இருக்கிற ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் பாதிக்கிறது என்கிற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

எனவே, பொது இடங்களில் கூடுபவர்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். முககவசங்கள் அணிந்து கொள்வதன் மூலமே தொற்றின் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்டு கொள்ள முடியும். அதோடு மட்டுமல்லாமல் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையோ அவர்களெல்லாம் முதல் தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களும், 2-வது தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களும் தினந்தோறுமான தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார - மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிகள் என்று எல்லா இடத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிற வகையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த பணியும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

10-ந்தேதி தடுப்பூசி முகாம்

எனவே, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயக்கம் காட்டாமல் அரசு மருத்துவ நிர்வாகங்களை அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஏற்கனவே விடுபட்டபவர்களை கணக்கில் எடுத்து, ஒட்டுமொத்தமாக முகாம்களில் தடுப்பூசி என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற ஜூலை மாதம் 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. 1 லட்சம் இடங்களில் நடைபெற இருக்கிற தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இது நம்மை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல, நமக்கு வந்தால் நமது குடும்பத்தாரையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்தமாக அக்கம் பக்கத்தில் இருக்கிற அனைவரையுமே பாதிக்கிறது. மிகவும் வேகமாக பரவும் தன்மை உடையது என்பதால் தடுப்பூசி செலுத்தி்கொண்டு அதில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

யாருக்கும் ஆபத்து என்கிற சூழல் இல்லை. இருந்தாலும் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது, கொரோனா விதிமுறைகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமென்று இருப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் பரணிதரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்