பணியின்போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் - தமிழக அரசு
அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை சரியாக அணிவதில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.